சென்னையில் பெண் ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ள இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அண்ணாநகரில் 35 வயது இளம் பெண் ரோஜா. (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், ரோஜா தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனிடையே, ரோஜாவுக்கு சத்யஜித் (35) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சத்யஜித் தனது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, விடுதி ஒன்றிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மேலும், அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட ரோஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சத்யஜித்தை கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.