இங்கிலாந்து எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி தர்மசாலா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களை எடுத்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 477 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோகித் 103 ரன்களும், கில் 110 ரன்களும் எடுத்தனர்.
அதேபோல் படிக்கல் 65 ரன்களும், சப்பரஸ் கான் 56 ரன்களும், ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதனால் இந்திய அணி 477 ரன்களை எடுத்தது.
இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜாக் கிராலி டக் அவுட் ஆக மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஒல்லி போப் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்படி அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழக்க அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார் ஜோ ரூட்.
நான்காவது இடத்தில் இறங்கிய ஜோ ரூட் பொறுமையாக விளையாடி 84 ரன்களை எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 195 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இந்தியாவில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். அதேபோல் பும்ரா மற்றும் குலதீப் யாதவ் தலா 2 விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது குலதீப் யாதவுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் தொடர் நாயகன் விருது இந்தியாவின் இளம் வீரர் ஜெய்ஷ்வாலுக்கு வழங்கப்பட்டது.