தனக்கும் அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து, டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஜாஃபர் சாதிக் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
டெல்லியில், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், ஜாபர் சாதிக்-யிடம் விசாரணை நடத்தி முக்கிய வாக்குமூலம் பெற்றுள்ளோம். இதில், அரசியல், திரைத்துறை, கட்டுமானத்துறை போன்ற துறைகளில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
குறிப்பாக, இயக்குநர் அமீர் மற்றும் ஜாபர் சாதிக் இடையே உள்ள தொடர்பு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் போதை பொருள் தொடர்புடைய பிரபலங்களின் பெயர் வெளியிடப்படும்.
மேலும், போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருட்களை கடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எந்த எந்த அரசியல் கட்சிகளுக்கு ஜாபர் சாதிக் நிதியுதவி அளித்தார்? என்றும், போதைப் பொருள் கடத்தல் மூலம் நிதி ஆதாயம் பெற்றவர்களை அடையாளம் காணும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இன்னும் நடந்து வருவதால், விரைவில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும்.
ஜாபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்போது, NDPS சட்டம், 1985 -ன் கீழ் பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.