இந்தியாவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வென்றார்.
71-வது உலக அழகி போட்டி பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. 28 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டி இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்றது.
இதன் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியை இந்தி திரைப்பட இயக்குனர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 117 பேர் பங்கேற்றனர். இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்றனர்.
இதில் இந்தியா, மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, செக் குடியரசு, இந்தோனேசியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்ச்சுகல், லெபனான், போட்ஸ்வானா, கவுதமாலா நாடுகளை சேர்ந்த அழகிகள் தகுதி பெற்றனர்.
இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024 ஆம் ஆண்டுக்கான 71-வது உலக அழகி பட்டத்தை வென்றார். மேலும் கிறிஸ்டினா பிஸ்கோவா சட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2022-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தைச் சூட்டினார்.
இந்தியா சார்பில் பங்கேற்ற சினி ஷெட்டி போட்டியின் முதல் 4 இடங்களுக்குள் வர முடியவில்லை. உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.