டெல்லி குடிநீர் வாரியத்தின் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
டெல்லி கேஷப்பூர் பகுதியில், குடிநீர் வாரியத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சுமார் 40 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் டெல்லி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். மீட்புக் குழுவினர் இளைஞரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் JCB இயந்திரத்தைக் கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
முன்னதாக, ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அது குழந்தை அல்ல, பெரியவர் என உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் 12 மணி நேரமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்புக் குழுவினர், ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து அந்த இளைஞரை சடலமாக மீட்டுள்ளனர். இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.