கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டதாகவும் இந்த நெருக்கடியை தவிர்க்க பிரதமர் மோடி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. ஆனால், ரஷ்யா, உக்ரைன் போர் தற்போதும் நீடித்து வருகிறது. அவ்வப்போது தாக்குதல்களை இருதரப்பும் தீவிரப்படுத்துகின்றன.
இந்த நிலையில், தான் கடந்த 2022- ஆம் ஆண்டு உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிரோஷிமா மீது அணு குண்டு வீசப்பட்ட பிறகு இதுவரை அந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. இதனால், கிட்டதட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சம் சர்வதேச அளவில் கிளம்பியிருக்கிறது.
ஆனால், பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களின் வலியுறுத்தல் புதினின் மனதை மாற்றியிருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் இது தொடர்பாக பகிர்ந்த தகவலை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், பிரதமர் மோடி மற்றும் பிற உலக தலைவர்களின் வலியுறுத்தல் இந்த நெருக்கடியை தவிர்க்க முக்கிய பங்காற்றியதாக கூறியுள்ளார்.
புதின் அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்ததால், ரஷ்யா அணு ஆயுதலை கைவிடுவதை உறுதி செய்ய அமெரிக்கா உடனடியாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் உதவியை நாடியிருக்கிறது. அதன்பிறகு பிரதமர் மோடியின் பேச்சு மற்றும் அவரது அறிக்கைகள் ஆகியவை இந்த நெருக்கடியை தவிர்க்க காரணமாக அமைந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் விவகாரத்தில் இந்தியா, அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, அமைதியான தீர்வு அவசியம் என்றும் கூறியது. குறிப்பாக உஸ்பெஸ்கிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, புதினிடம் இந்த யுகம் போருக்கானது இல்லை என்றும் கூறினார்.