ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாஅயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா குழந்தை ராமரை தரிசிக்க இன்று அயோத்திக்கு சென்றார். அவருடன் ராஜஸ்தான் மாநில அமைச்சர்ககளும், பாஜக நிர்வாகிகளும் சென்று ராமரை தரிசித்தனர். முன்னதாக விமானத்தில் சென்ற அவர்கள் பக்தி பாடலை பாடிக்கொண்டு சென்றனர்.
அயோத்தியில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, ” இன்று அயோத்திக்கு வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் குழந்தை ராமரை தரிசனம் செய்தேன். பிரமாண்டமான மற்றும் தெய்வீகமான கோவிலில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
குழந்தை ராமருக்கு இவ்வளவு பிரமாண்டமான கோவில் காட்டியதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் நம் ஒவ்வொருவருடனும் வசிக்கிறார். ” என்று கூறினார்.