குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து, 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லீம் நாடுகள் என்பதால், சிஏஏ சட்டத்தில் முஸ்லீம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கு முன்பு வன்முறை வெடித்த டெல்லியின் ஜாமியா உள்ளிட்ட பகுதிகளில், உளவுத்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. எனவே, பாதிப்பு ஏற்படக் கூடிய மாநிலங்களில் போலீசார் முன்னெச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.