பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை மற்றும் நிறை புத்தரிசி பூஜை, வருடப் பிறப்பு போன்றவற்றிற்குத் திறக்கப்படுவது வழக்கம். மேலும், ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில்,பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று மாலை 5:00 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. நடை திறந்ததும் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி தீபம் ஏற்றுவார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் பங்குனி மாத பூஜைகள் தொடங்கும்.
பங்குனி உத்திர திருவிழா மார்ச் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதனைத்தொர்ந்து நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.மார்ச் 25ஆம் தேதி காலை 11:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி சன்னிதானம் திரும்பியதும் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற்று நடை அடைக்கப்படும்.