கோவை ராமநாதபுரத்தில் வாட்டர் ஏடிஎம் செயல்பாட்டை, கோவை தெற்கு சட்ட மன்றத் தொகுதி உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், காணொளி காட்சி மூலம் கோவை அரசு மருத்துவமனை கட்டிட்டம் திறப்பு விழாவில் நான் கலந்து கொண்டேன். அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு திட்டங்களைத் துவக்கி வைத்தார். அது ஒரு அரசு விழா என்பதாலும், நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதாலும், கலந்து கொண்டேன்.
அரசு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் அரசியல் மேடையாக மாற்றிவிட்டார். பிரதமர் பற்றி அரசு மேடையில் முதல்வர் பேசியது அரசியல் நாகரிகம் அல்ல.
வாட்ஸ் அப் மூலம் பாஜக பொய் பரப்புவதாக முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். பொய் பேசுவது திமுகவிற்கு சொந்தமானது. 1967 -ல் இருந்தே திமுக பொய் பேசி வருகின்றது. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இனியாவது உங்களது பொய்களை நிறுத்தி கொள்ளுங்கள். இனி அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்.
ஆறு லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் மத்திய அரசால் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவதால், திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
சிஏஏ சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது அல்ல. சிலர் சிறுபான்மையினரை அரசியல் ஆதாயத்திற்காக தூண்டி விடுகிறார்கள். அதுமட்டுமல்ல, சிஏஏ சட்டத்தை நிறைவேற்ற மாட்டேன் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றார்.