தமிழகத்தில் 2026-ம் ஆண்டு இரண்டு சக்திகள் இல்லாத, பாஜக ஆட்சி அமையும் என நடிகர் சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் சரத்குமார், பொறுப்புக்காக நான் பாஜகவில் சேரவில்லை, பொறுப்பாக நடந்து கொள்ளவே பாஜகவில் இணைந்துள்ளேன். யார் என்ன வேண்டும் என்றாலும் நினைக்கட்டும், அது பற்றி எனக்கு கவலையில்லை. இப்போது நல்லா போயிட்டு இருக்கு. அது சிலருக்குப் பிடிக்கவில்லை.
சிண்டு முடிந்துவிடப் பார்க்கிறார்கள். அது நடக்காது. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு முடிவு செய்தால், அதில் உறுதியாக இருப்பேன். இது திமுகவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பாவம் தெரியவில்லை. என்ன செய்வது. எனக்காக திமுக 37 ட்வீட்களைப் போட்டுள்ளது. கருணாநிதி இறந்தபோது அத்தனை ட்வீட் போடவில்லை. சின்னச் சின்ன விசயங்களைக் கூடப் பெரிதுபடுத்தி ட்விட் போட்டுள்ளார்கள். இதை பார்க்க நல்லா இருக்கு.
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு பாஜகவுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக் கூடாது என சிந்தித்தேன். வரும் 2026 -ம் ஆண்டு இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகத் தோன்றியது. எனவேதான், எனது 28 ஆண்டு அரசியல் அனுபவத்தைத் தேச வளர்சிக்கு அர்ப்பணிப்பதற்காக, பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளேன்.
ஒன்று மட்டும் உறுதி. பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வந்தால்தான், நாடு செழிக்கும். அதுபோல, தமிழகத்தில் 2026-ம் ஆண்டு இரண்டு சக்திகள் இல்லாத, பாஜக ஆட்சி அமையும் என நம்புகிறேன் என்றார்.