சென்னையில் மெட்ரோ இரயில் பணிகள் நடைபெறுவதால், ஒரு ஆண்டுக்கு போக்குவரத்தில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஏராளமான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், வணிக நோக்கம் காரணமாகவும், ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் மெட்ரோ இரயில் சேவை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓரு வருடத்திற்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பட்டுலாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை – திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராயப்பேட்டை பகுதியில் இருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கவே, போக்குவரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, புதிய போக்குவரத்து மாற்றங்களை பொது மக்கள் அறிந்து கொண்டு, தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொண்டால், காலநேரம் மிச்சமாகும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம் என்பதால், அதற்கு ஏற்ப பயண திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.