தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக பாரதிய மக்கள் பிரஜா ஐக்கிய கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில், சீமானை தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு 6.72 சதவீத வாக்குகள் கிடைத்தது.
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், வழக்கம் போல், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட நாம் தமிழர் கட்சி முடிவு செய்தது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது.
இந்த நிலையில், கரும்பு விவசாயி சின்னம், கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது. இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின்படியே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
சின்னம் ஒதுக்குவதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை எனக் கூறி சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால், இந்த விவாகரம் தொடர்பாக சீமான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிய மக்கள் பிரஜா ஐக்கிய கட்சியின் தலைவர் யோகி ஆர்.கே. ஜெயக்குமார், எங்கள் கட்சி 13 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. நாங்கள் யாருடைய தூண்டுதலின் பேரிலும், கரும்பு விவசாயி சின்னத்தை பெறவில்லை. தேர்தல் ஆணையத்தில் முறைப்படி விண்ணப்பித்து பெற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.