குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன் பாகிஸ்தானை சேர்ந்த இந்து அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக ஓரிரு தினங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்தச் சட்டத்தின் மூலம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ஏராளமான ஏழை சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வருவதற்கான கதவுகளை பாஜக அரசு திறந்து விட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் வேலைகள் கொடுப்பதன் மூலம் மக்களின் பணத்தை பாஜக செலவிட விரும்புவதாக தெரிவித்தார்.
சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிக்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு எதிராக கெஜ்ரிவால் குரலெழுப்புகிறார்.
அவர்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை இழந்து விட்டு, அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்கள். நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு இன்றி அவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் நாம் இரக்கம் காட்டக் கூடாது? அவர்களுடைய நாடுகளில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு நம் நாட்டுக்கு வந்தவர்கள் மீது கெஜ்ரிவால் போன்ற தலைவர்களுக்கு இரக்கமே இல்லையா என மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு பாகிஸ்தான் அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.