ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் அரசு தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், இராணுவ செலவினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில், பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
காஸாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து, தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பாவி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தி உள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் அரசு தீவிரப்படுத்த தொடங்கி உள்ளது. 2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், காஸாவிலுள்ள ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போரால் ஏற்பட்டுள்ள செலவுகளை சரிசெய்வதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பட்ஜெட், இராணுவ செலவினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்த பட்ஜெட்டுக்கான தொகை ரூ.13 லட்சத்து 41 ஆயிரத்து 981 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 868 கோடி செலவினத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் போருக்கான செலவினங்களை ஈடுகட்டுவது மற்றும் இராணுவ அமைப்பை பலப்படுத்துவது என்ற இரண்டு நோக்கங்களும் அடங்கும்.
இந்த கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீட்டால், 2024-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.6 சதவீத பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, நாட்டில் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளுக்கும் அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.