இந்தியாவை அசைக்கமுடியாத சக்தியாக மாற்ற பிரதமர் மோடி வந்துள்ளார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
“பிரதமர் மோடி எனக்கு பிடித்தமான மண்ணுக்கு வந்துள்ளார். கன்னியாகுமரியையும் பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்கமுடியாது. 1991 டிசம்பர் 11-ம் தேதி இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து முரளி மனோகர் ஜோஷியுடன் ஏக்தா யாத்திரை என்ற ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டார். இந்தியாவை துண்டாடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களும் பிரிந்துகிடந்தன. 1992 ஜனவரி 26 அன்று காஷ்மீரில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து யாத்திரையை முடித்தார் மோடி.
நான் யாருக்கும் பயப்படமாட்டேன் என காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த மண்ணின் மைந்தனாக நீங்கள் பிரதமர் மோடியை கொண்டாடி கொண்டிருக்கிறீர்கள். இன்று குமரி மாவட்டத்துக்கு மிகப்பெரிய உறுதிமொழியோடு வந்திருக்கிறார். 3 வது முறையாக மோடி பிரதமராக வரப்போகிறார். இதுபோன்ற அரசியல் தலைவர் கண்ணுக்கெட்டிய தூரம்வரை இல்லை. இந்தியா கூட்டணி வாரிசு அரசியல் செய்கிறது.
மக்களே என் குடும்பம். மோடியின் தம்பிகளாக இங்கு வந்துள்ளீர்கள். 400 எம்.பி-க்கள் என்பது வெறும் வார்த்தை கிடையாது. மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும்போது 400 எம்.பி-க்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல, மக்களின் உணர்வாக இருக்கும்.
அதில் 370-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பா.ஜ.க-வை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதே குமரிக்கு இன்னொரு மனிதரும் வந்தார். 1882-ல் டிசம்பர் 24-ல் நரேந்திர தத்தா என்கிற மனிதன் கடலில் நீந்தி மூன்று நாட்கள் பாறையில் அமர்ந்து நாடு, மக்கள் குறித்து சிந்தித்து விவேகானந்தராக மாறினார்.
இந்தியாவை அசைக்கமுடியாத சக்தியாக மாற்ற மோடி வந்துள்ளார். மோடி விஸ்வகுருவாக மாறிக்கொண்டிருக்கிறார். விவேகானந்தர் சிக்காகோவுக்கு போனார். ராமகிருஷ்ண மிஷனை தொடங்கினார். டீ விற்றுக்கொண்டிருந்த மோடி ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ணர் மிஷனுக்கு சென்றார். அங்கிருந்தவர் சொன்னார், `ஞானி ஆகி இருக்க நீ பிறக்கவில்லை. இந்த நாட்டுக்காக பிறந்துள்ளாய்’ என திருப்பி அனுப்பப்பட்டார். 2-வது முறையும் சென்றார். அப்போதும் திருப்பி அனுப்பப்பட்டார். இப்போது 140 கோடி மக்களின் விஸ்வ குருவாக அமர்ந்துள்ளார்.” 2047 ல் மோடி தலைமையில் இந்தியா வல்லரசு நாடாகும். குமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து கட்சிகளும் தே.ஜ., கூட்டணியில் உள்ளன. 3வது முறையாக மோடி மீண்டும் பிரதமர் ஆவார். இது உறுதி எனத் தெரிவித்தார்.