டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்து டெல்லி அழைத்து செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் ஆம்ஆத்மி அரசு சார்பில் 2021 நவம்பரில் இந்த புதிய மதுபான கொள்கை அமலுக்கு வந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு 2022 ஜூலையில் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.இதுதொடர்பாக மணிஷ் சிசோடியா, விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் தெலங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொழிலதிபர் குழுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த குழு மூலம் ரூ.100 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த குழுவுக்கும் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவரிடம் சிபிஐ, மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஹைதரபாத்தில் உள்ள கவிதாவின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் நடத்தினர்.
சோதனை நிறைவுற்ற நிலையில், கவிதா கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்து செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.