நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டில், விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென 8 முறை அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கேஜரிவால் ஆஜராக 8 முறை தாங்கள் சம்மன் அனுப்பியும் கேஜரிவால் ஒத்துழைக்க மறுப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தொடர்ந்து வழக்கு தொடர்ந்தது.
இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை மனுவை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்து வழக்கில் மார்ச் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சம்மன் அனுப்பிள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி கேஜரிவால் தரப்பில் தில்லி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கேஜரிவாலின் கோரிக்கையை ஏற்க மறுத்த தில்லி முதன்மை அமர்வு நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் விலக்கு பெறுவதற்கான விசாரணை நீதிமன்றத்தை நாட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
அமலாக்கத்துறை அனுப்பிய 8 சம்மன்களை புறக்கணித்துள்ள அரவிந்த் கேஜரிவால், நீதிமன்ற சம்மனை ஏற்று விசாரணைக்கு நாளை ஆஜராகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டில் தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.