குடியுரிமை திருத்த சட்டம் உண்மையான ஜனநாயகத்திற்கான மிகச்சிறந்த நடவடிக்கை என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் (Mary Millben) புகழாரம் சூட்டி உள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இச்சட்டம் கடந்த 11-ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.
இந்தச் சட்டமானது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது.
வரலாற்று சிறப்பு வாய்ந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உண்மையான ஜனநாயகத்திற்கான மிகச்சிறந்த நடவடிக்கை என்று, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் புகழாரம் சூட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது ஜனநாயகத்தின் உண்மையான வெளிப்பாடாகும். பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பையும் அடைக்கலத்தையும் இது வழங்குகிறது என்று பதிவிட்டுள்ளார்.