வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சுமார் 48 ஆயிரம் திருநங்கைகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
17-வது நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்பாக, தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எனவே, 18-வது நாடாளுமன்ற மக்களவைக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், 18-வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, 97 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், சுமார் 48 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் திருநங்கைகளின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 75 ஆக இருந்தது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் (7,797), தமிழ்நாடு (5,793), கர்நாடகா (4,826) ஆகிய மாநிலங்களில் இருந்தது. அருணாச்சல பிரதேசம், டாமன் மற்றும் டையூ, கோவா, லட்சத்தீவு, மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திருநங்கை வாக்காளர்கள் இல்லை.
திருநங்கைகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபட ஊக்குவிப்பதும் தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போது, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்.