ஆர்.சி.பி அணியின் நட்ச்சத்திர வீரர் விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்னும் அணியுடன் வந்து சேரவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய விராட் கோலி கடந்த ஜனவரி மாதமே லண்டன் சென்றார். அவர் எதற்காக விலகினார் என்பது கேள்வி கூறியாக இருந்தது.
இது குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து மும்பை திரும்பி இருக்கிறார். விரைவில் ஆர்.சி.பி. அணியுடன் விராட் கோலி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.