நான் தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டுள்ளேன் என தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் கூறியுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
அந்த தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா. அதேபோல் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரவிச்சந்திர அஸ்வின் தனது 100வது போட்டியை சந்தித்தார்.
அதேபோல் 100-வது டெஸ்டில் விளையாடிய 14-வது இந்திய வீரர் மற்றும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.
முன்னதாக ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த மைல்கல்லை கடந்த 9-வது வீரர், 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.
இப்படி 100 டெஸ்டில் விளையாடி இருப்பதுடன், 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
அந்த விழாவில் அஸ்வின் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். அஸ்வினுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார்.
மேலும் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதை நினைவு கூறும் வகையில் தங்க நாணயத்தால் 500 என்று வடிவமைக்கப்பட்ட கேடயமும் அவருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், “2008-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை சேர்த்தது. அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. தோனி எனக்கு பல வாய்ப்புகளை வழங்கி என்னை எல்லா வழியிலும் ஊக்கப்படுத்தினார்.
நான் தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த நிலைக்கு வருவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.