வாகன அணிவகுப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று கோவை வருவதை முன்னிட்டு, மாநகர் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, முதன் முறையாக இன்று தமிழகம் வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி, கோவையில் நடைபெறும், பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி, காவல் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு பேரணி, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகில் முடிவடைகிறது.
இந்நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக இன்று மாலை 5.30 மணிக்கு கோவை வரும் பிரதமர் மோடிக்கு, பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன பேரணி நடைபெறும் இடங்களில், தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, பிரதமரின் தனி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கோவையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாகன அணிவகுப்பு நடைபெறும் சாலையில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோவை முழுவதும், போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதுடன், வாகன சோதனையிலும் ஈடுபடுகிறார்கள்.
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள், தீவிர சோதனைக்கு பின்னரே, மாநகர பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.