இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22ம் தேதி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கப்பட்டது.
இன்று காலை 9:30 மணியளவில் டிக்கெட் விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக 9.10 மணிக்கே டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது.
9.10 மணியளவில் டிக்கெட் விற்பனை தொடங்கினாலும் ரசிகர்களால் டிக்கெட்டை வாங்க முடியவில்லை. அனைத்து டிக்கெட்களும் விற்றதாக காண்பித்தது.
டிக்கெட் விற்பனைக்கு திறந்து அடுத்த நொடியே அணைத்து டிக்கெட்களையும் யார் வாங்கியது என்று தான் தெரியவில்லை என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பொங்கியெழுந்த பின்னர் மீண்டும் விற்கப்பட்டதாக தெரிவித்த டிக்கெட்கள் ஒவ்வொன்றாக விற்பனைக்கு வந்தது.
இப்போவது டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று மகிழ்ச்சியுடன் உள்ளே சென்ற ரசிகர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் தான். ஆம், நமக்கு தேவையான சீட்டை கிளிக் செய்து பணம் செலுத்த செல்லும் போது மீண்டும் முயற்சி செய்யுமாறு காண்பிக்கிறது.
இதனால் மீண்டும் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் ரிலோடு செய்து முயற்சிக்கு போது 10 நிமிடம் வரிசையில் வைத்திருக்கும் படி வருகிறது. அப்படி காத்திருந்த ரசிகர்கள் மீண்டும் ரிலோடு செய்ய இப்போது வேறு செயலியில் முயற்சி செய்யவும் என்று வருகிறது.
பின்னர் வேறு செயலுக்கு சென்று முயற்சி செய்த ரசிகர்கள் அதில் coming soon என்று போட்டிருப்பதை கண்டு ஆவேசம் அடைந்தனர். இப்படி காத்திருந்து காத்திருந்த காலங்கள் போனதடி என்பது போல 9.30 மணிக்கு வாங்கவேண்டிய டிக்கெட் காக ரசிகர்கள் காலை 5 மணியில் இருந்து காத்திருந்தது தான் மிச்சம்.