ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள மதார் ரயில் நிலையம் அருகே, சபர்மதி – ஆக்ரா விரைவு ரயிலின், 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அங்கு விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி விட்டு, தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
குஜராத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சபர்மதி – ஆக்ரா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு 1 மணி அளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் இன்ஜின் உடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி விட்டு, தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் ரயில்கள், மாற்று வழியில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் விபத்து காரணமாக, 6 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145 2429642 என்ற உதவி எண் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.