நாமக்கல் நகரில் மிகவும் புகழ் பெற்ற நரசிம்மர், ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில், பங்குனி திருத்தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேர்த்திருவிழா, நரசிம்மர், ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு பங்குனி திருத்தேர் கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் கொடியேற்ற விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் அறங்காவலர், உதவி ஆணையர் மற்றும் பக்தர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் பக்தியுடன் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தையொட்டி, இன்று இரவு 8 மணியளவில் அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. வரும் 24-ம் தேதி, நரசிம்மர் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் திருக்கல்யாணம் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான நரசிம்மர் கோயில் தேரோட்டம், வரும் 26-ம் தேதி காலையில் நடைபெறுகிறது. மாலையில் அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.1-ம் தேதி ஊஞ்சல் உற்சவ சேவையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.