மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார். அங்கு கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல் மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடையே பிரதமர் மோடி சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.
இந்த கூட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் பாரிவேந்தர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடியை வரவேற்று, சேலம் மாநகரம் முழுவதும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. திரும்பிய திசை எங்கும் பாஜக கொடி பறக்கிறது.
பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் பல நூறு கிலோ வண்ண மலர்களை தூவி சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளனர். கூட்டணி கட்சியினர் மோடியை வரவேற்க ஆர்வமுடன் காத்துள்ளனர். இதனால், சேலம் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.