2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 19 -ம் தேதி தொடங்கும் தேர்தல், ஜூன் 1 -ம் தேதி 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இத்துடன், ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்குச் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் விதிகள் உடனே அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஆறு மாநிலங்களில் மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்களைப் பணியிட மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், உத்தரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத், பீகார், மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் உள்துறை செயலாளர்களைப் பணியிட மாற்றம் செய்துள்ளது. அதேபோல, மேற்கு வங்க டி.ஜி.பியை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, மும்பை மாநகராட்சியின் ஆணையர் மற்றும் கூடுதல் மற்றும் துணை ஆணையர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்ட உடனே, நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் உயர் பதவியில் உள்ளவர்களை தேர்தல் ஆணையம் தனது சிறப்பு அதிகாரம் மூலம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.