கூட்டணி குறித்த முடிவுகளும் அடுத்த கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் பிரதமர் மோடி இன்று மாலை ரோட் ஷோவில் பங்கேற்கிறார். இந்நிலையில், பிரதமர் ரோட் ஷோ நிறைவு பெறும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
“மக்களவைத் தேர்தலில் கோவை உள்பட 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார்.
தமிழகத்தில் ‘ரோட் ஷோ’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது இதுவே முதல்முறை. பிரதமர் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு இடையூறு ஏற்படுத்திய நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மக்களை தரிசனம் செய்யும் யாத்திரையாக இது இருக்கும்.
கூட்டணி குறித்த முடிவுகளும் அடுத்த கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும். காவல் துறை அனுமதியோடு பிரதமர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி தீர்ப்பில் பிரதமரை பார்ப்பதற்கு ஜனநாயக ரீதியாக மக்களுக்கு உரிமை உள்ளது என கூறப்பட்டுள்ளது. 10 மீட்டர் தொலைவில் மக்கள், பிரதமரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆர்.எஸ்.புரத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த இருகிறார்” என தெரிவித்தார்.