சென்னையில், 579 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 -ம் தேதி எண்ணப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன.
இந்த நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் இராதாகிருஷ்ணன், மக்களவைத் தேர்தல் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நேரத்தில் இருந்து தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, சென்னையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.
சென்னையை பொறுத்தவரை 579 வாக்குசாவடிகள் பதற்றமானவை. இதில், கூடுதல் ஆட்களை நியமித்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். பொது மக்களும் தேர்தல் நேரத்தில் அதிக பணத்தை தேவையின்றி வெளியே எடுத்துச்செல்ல வேண்டாம். வியாபாரிகள் உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்லவேண்டும்.
மிகவும் வயதானவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குப்பதிவு செய்யும் நடை இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.