இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்திய கடற்படை ஆற்றி வரும் முக்கிய பங்கை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்ச் 18 அன்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
2024 பிப்ரவரியில் புதுதில்லியில் நடைபெற்ற இண்டஸ்-எக்ஸ் உச்சி மாநாடு மற்றும் இன்று (2024 மார்ச் 18) இந்தியாவில் தொடங்கியுள்ள இருதரப்பு முப்படைப் பயிற்சியான ‘டைகர் ட்ரிம்ஃப்’ போன்றவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்திய கடற்படை ஆற்றி வரும் முக்கிய பங்கை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டினார்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்க கடற்படை கப்பல்களை பழுது பார்ப்பது போன்ற பிற பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இந்த ஆலோசனையின்போது அவர்கள் விவாதித்தனர்.
இரு அமைச்சர்களும் 2023 நவம்பரில் புதுதில்லியில் இந்தியா அமெரிக்கா அமைச்சர்கள் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையின்போது நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.