“ஜெய்ராம் ரமேஷ், உங்களுடைய கேள்விகள் திமுக அரசிடம் கேட்கப்பட வேண்டியவை, பிரதமர் மோடியிடம் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“ஜெய்ராம் ரமேஷ் அவர்களே, தமிழகத்தின் பெருமையான ஜல்லிக்கட்டை தடை செய்தவர்களுக்கு இப்போது தமிழகத்தின் மீது புதிய பாசம் தேர்தல் நெருங்குவதால் வரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் கள யதார்த்தத்தை பார்ப்பதே இல்லை. கடந்த 1980-களில் இருந்து காங்கிரஸ் தனது ரொட்டி, கப்படா, மக்கான் என்ற தேர்தல் வாக்குறுதியை மாற்றவே இல்லை.
வெள்ள நிவாரணத்துக்காக தமிழகம் கேட்ட தொகை ரூ,15,645 கோடி மக்களவையில் நிதியமைச்சகத்தால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது, மாறாக, ரூ.37,907 கோடி இல்லை. நாங்கள் அவர்களிடம் திமுக அரசு வெள்ள நிவாரணமாக ரூ.37,907 கோடி கோரியதற்கான விபரங்களைக் கேட்டோம். அவர்கள் தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார்கள். இந்த விஷயத்தை அரசியலாக்குவதற்கு முன்பாக தனது கூட்டணிக் கட்சியிடம் தேவையான தகவல்களை ஜெய்ராம் ரமேஷ் வாங்கித்தர முடியுமா?
Thiru @Jairam_Ramesh, known for banning the pride of TN, the Jallikattu, has a newfound affection for Tamil Nadu (Understandable as elections are around the corner). Sitting in an ivory tower, Congress leaders do not see the ground reality. Neither have they changed nor their… https://t.co/BiL10iyzi5
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 19, 2024
வெள்ளத்துக்கு முன்பாக 99 சதவீதம் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக சொன்ன திமுக அரசு, வெள்ளத்துக்கு பின்பு 42 சதவீதம்தான் நிறைவடைந்ததிருந்தது என மாற்றிப் பேசியதை ஜெய்ராம் அறிவாரா?
தமிழகத்தின் கைத்தறி தொழில் திமுக அரசின் இயலாமையினால்தான் தள்ளாடி வருகிறது. மின்சார கட்டணம் 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பீக் ஹவர் கட்டணம் 35 கிலோ வாட்சில் இருந்து 150 கிலோ வாட்சாக உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தர கட்டணம் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது.
இலவச வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தில் திமுக அரசு நடத்திய மிகப் பெரிய ஊழலை தமிழக பாஜக சமீபத்தில் அம்பலப்படுத்தியது. தமிழக கைத்தறித் துறை அமைச்சர், கைத்தறி தொழிலாளர்களுக்கு ஆர்டர் வழங்க குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு தொழிலாளர்களைச் சுரண்டுகிறார்.
திமுக அரசின் இயலாமையினால் அம்பத்தூர் தொழில்பேட்டை வெள்ளத்தில் மூழ்கியபோது எங்களின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தொழில்களை மீண்டும் தொடங்க காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.
எனவே, ஜெய்ராம் ரமேஷ் அவர்களே… கேள்வி கேட்பதற்கு முன்பு அதற்காக முன்தயாரிப்பை சரியாக செய்யுங்கள். உங்களுடைய கேள்விகள் திமுக அரசிடம் கேட்கப்பட வேண்டியவை, பிரதமர் மோடியிடம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.