நேற்று, திருச்சியில் இருந்து பேப்பர் பண்டல்களை ஏற்றிக் கொண்டு, சென்னை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்தபோது திடீரென நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில், கண்டெய்னர் லாரியின் முன்புறம் மேம்பாலத்திற்கு மேலிருந்து கீழே தொங்கியது.
இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருப்புறத்திலும் சுமார் 10 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் போலீசார் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, விழுப்புரம் அருகே விபத்து நடைபெற்ற சாலை வழியாகக் கள்ளக்குறிச்சி திமுக மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கார் வந்துள்ளது. அதனை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால், டென்சனான கள்ளக்குறிச்சி திமுக மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது, தன்னைப் போலீசார் மரியாதை குறைவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.