காட்பாடி அருகே திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரை சேர்ந்தவர் அசோகன். இவர், வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் அரசு ஒப்பந்ததாரரான அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டிபி கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வங்கி தொடர்பான ஆவணங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில், பிரின்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.