எத்தியோப்பியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை, மும்பை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிலர் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம், போதைப்பொருள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருகின்றனர். இதனை கண்டறிந்து விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 9.829 கிலோ கொக்கைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, போதைப்பொருட்களை கடத்தி வந்த இந்தோனேசிய மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், போதைப்பொருள் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்ப இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களுடன் தொடர்புடைய இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.