தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார் அளிப்பதற்காக கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), டெல்லியில் உள்ள வருவாய்த் துறை ஆகியவை சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதைத் தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அதன்படி, சென்னை ஜிஎஸ்டி மண்டலம், ஒவ்வொரு ஆணையரகத்திலும் போதிய அளவு பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளன. இதன் மூலம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து மாவட்டங்களையும் கண்காணிக்கவும், தேர்தல் நடைமுறைகளின்போது வாக்காளர்களை கவர்ந்திழுக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் சட்டவிரோத கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து குழுக்களும் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து சேமிப்புக் கிடங்குகளையும் கண்காணித்து, புடவைகள், மின்சாதனங்கள், பாத்திரங்கள், ரொக்கம் போன்றவற்றை இருப்பு வைப்பதைத் தடுக்கும்.
சென்னை ஜிஎஸ்டி மண்டலத்தில் உள்ள அனைத்து ஆணையரகங்களும், சிபிஐசியால் அமைக்கப்பட்ட பல்வேறு செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட சட்ட அமலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் காலங்களில் சட்டவிரோதமாக பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களின் நடமாட்டம் தொடர்பான ஏதேனும் தகவல் கிடைத்தால் பொதுமக்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு கட்டுப்பாட்டு அறை விவரம்; தொலைபேசி எண் – 044- 24360140 மின்னஞ்சல் loksabhaeleche-2024[at]gov[dot]in
புதுச்சேரி கட்டுப்பாட்டு அறை விவரம்; தொலைபேசி 0413-2221999 மின்னஞ்சல் help-pycgst[at]gov[dot]in