டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என்ற அறிவிப்பு சட்டத்தையும், பொதுமக்களையும் அவமதிக்கும் செயல் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகத் தொடர்வார் என்றும், சிறையில் இருந்தபடியே வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அதிஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, டெல்லி மக்களையும், சட்டத்தையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயல் என தெரிவித்தார்.
தன்மேல் தவறு இல்லை என்றால் 9 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.