ரஷ்யாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தீவிரவாத தாக்குதல் நடந்ததில் 60 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட அந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது அதிரடியாக நுழைந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டது. அங்கு கூடியிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதல் நடத்தியது.
இதனால் உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தாக்குதலில் , இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டடோர் காயம் அடைந்தனர்.
60 பேர் தீவிர சிகிச்சை பெறக்கூடிய நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்றும் முதலில், கூறப்பட்ட நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
ரஷ்யாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.