ரஷ்யாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட அந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது அதிரடியாக நுழைந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டது. அங்கு கூடியிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதல் நடத்தியது.
இதனால் உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தாக்குதலில் , இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
தாக்குதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் பயங்கரவாதிகள் என ரஷ்ய அரசின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ரஷ்ய அதிபராக புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.