உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக காச நோய் தினம் ஆண்டு தோறும் மார்ச் 24 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
காசநோயின் பாதிப்புகள், பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கம்.
உலகில் முதன் முதலாக 1882 ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் ஹோச் என்பவர் மைக்ரோ பாக்டிரியம் டியுபர் குளோசிஸ் என்ற பாக்டீரியாவில் காச நோயை உருவாக்குவதை கண்டறிந்தார்.
காச நோய் ஆரம்பக் கட்டத்தில் நுரையீரலை மட்டும் பாதிக்கும். அதன்பின் நரம்பு மண்டலத்தை நோக்கி பரவும். அதுமட்டும் இல்லாமல் உடலின் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் நோய் உருவாகலாம்.
நெஞ்சு வலி, இருமும்போது சளியுடன் ரத்தம் வெளிவருதல், தொடர்ச்சியான இருமல் பிரச்சினை, போன்ற அறிகுறிகள் காணப்படும். இது தவிர அவ்வப்போது காய்ச்சல், சளி, பசியின்மை, இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்த்தல் உடல் சோர்வு, சரும நிறம் வெளிறுதல், திடீர் எடை குறைவு போன்ற அறிகுறிகள் உண்டாகும்.
காசநோயின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட உலக சுகாதார நிறுவனம் 1993 ஆம் ஆண்டு அதை கட்டுப்படுத்துவதற்கான உலகளவிய திட்டத்தை கொண்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நோய் வந்தபின் அதற்கான தனிப்பட்ட சிகிச்சையோ மருந்தோ கிடையாது.
காசநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து BCG தடுப்பு மருந்து என்று அழைக்கப்படுகிறது. நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிடப்படுகிறது.