ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா வீரர் ஹர்ஷித் ராணாவுக்கு நேற்றைய போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 60% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இந்த தொடரின் மூன்றாம் நாளான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் களமிறங்கியது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஐதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இளம் வீரர் ஹர்சித் ராணா அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றிபெற வைத்தார்.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணி தரப்பில் பேட்டிங் செய்த மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷித் ராணா அதை கொண்டாடிய விதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்த போது நடந்து வெளியேறிய போது, பவுலிங் செய்த ஹர்சித் ராணா நேராக அவரின் முகத்திற்கு முன் நின்று ஃபிளையிங் கிஸ் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
22 வயதாகும் ஹர்சித் ராணா, 33 வயதாகும் சீனியர் வீரரான மயங்க் அகர்வாளிடம் இப்படி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் கடைசி ஓவர் வரை அதிரடியாக விளையாடிய கிளாசன் விக்கெட்டை வீழ்த்திய பின், “வெளியே போ” என்பது போல் ஹர்சித் ராணா செய்கை செய்தார்.
இதற்கு அங்கேயே கிளாசன் திரும்ப கேட்க முன் வந்த போது, அவரை அமைதிபடுத்தி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அனுப்பி வைத்தார். இதனால் பலரும் ஹர்சித் ராணா மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஹர்சித் ராணாவின் எல்லை மீறிய செயல்பாடுகளுக்கு கள நடுவர் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் லெவல் 1 விதியை 2 முறை மீறியதால் போட்டி ஊதியத்தில் இருந்து 60 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை ஹர்சித் ராணாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் எதிர்காலத்தில் இப்படியான செயல்படுகளில் ஈடுபட கூடாது என்றும்அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.