டெல்லியில் உரிய ஆவணங்களின்றி, கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் உரிய ஆவணங்களின்றி, கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த பணம் ஷாஹ்தராவில் உள்ள ஒரு வியாபாரிக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. குருகிராமில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த பணம் கரோல்பாக்கில் உள்ள ஒருவருக்கு வழங்கப்பட இருந்ததாகவும் கூறினர்.
இந்த பணம் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வழங்க எடுத்து வரப்பட்டதா? யார் மூலம் இந்த பணம் கொடுக்கப்பட்டது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.