வலங்கைமான் சீதளாதேவி அம்மன் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருவாரூர் நகரில் இருந்து 33 கி.மீ தொலைவில், குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வலங்கைமான். இங்கு `பாடைகட்டி மாரி’ என்றழைக்கப்படும் அருள்மிகு சீதளாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்குத் திருவாரூர் மட்டுமல்லாது, தஞ்சை, கும்பகோணம், சீர்காழி, சிதம்பரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
அவ்வாறு அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அம்மனுக்கு பக்தர்கள், பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், தொட்டில் கட்டுதல், முடி இறக்குதல், வேப்பிலை ஆடை உடுத்துதல் என பல நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
கடும் நோயால் பாதிக்கப்பட்டு, டாக்டர்களால் கைவிடப்பட்டவர்கள் இங்கு வந்து அம்மனை வேண்டி கொள்கிறார்கள். அவர்களது நோய் தீர்ந்து உடல் நலம் பெற்ற உடன், தங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கக் காரணமாக இருந்த அம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் பாடை கட்டி நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
அதாவது பாடைகட்டி நிகழ்ச்சி என்பது, பாடையில் படுக்கவைத்து, மேளம், தாளம் முழுங்க அந்த பாடையை நாலு பேர் சுமந்து சென்று கோயிலை வலம் வருவர். இதனையே, பாடை காவடி என்று அழைக்கின்றனர். அவ்வாறு பாடை காவடி நேர்த்திக்கடன் செய்பவர்களின் தலையெழுத்தே மாறும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில், வலங்கைமான் சீதளாதேவி அம்மன் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது, ஏராளமானவர்கள் பாடை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில், சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.