ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வட இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று, ஹோலி. தென்னிந்தியாவில் இப்பண்டிகையின் கோலாகலம் குறைவு என்றாலும், வட இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில், வியக்கத்தக்க வகையில் மிக உற்சாகமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஹோலி பண்டிகை அன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி, அனைவரும் ஒன்று என எண்ணும் மகத்துவம் ஓங்கி நிற்பது இவ்விழாவின் சிறப்பாகும்.
அந்த வகையில், இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “ஹோலி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு மகிழ்ச்சியான பண்டிகை ஹோலி. இது நம் வாழ்வில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. ஹோலியின் பல்வேறு வண்ணங்கள் நம் நாட்டின் பன்முகத்தன்மையைக் குறிக்கின்றன. இந்தப் பண்டிகை மக்களிடையே அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை ஊக்குவிக்கிறது. இந்த விழா நமது கலாச்சார பாரம்பரியத்தை வலுப்படுத்த நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
இந்த வண்ணங்களின் திருவிழா ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும், புதிய ஆர்வத்துடன் தேசத்தைக் கட்டமைப்பதில் பணியாற்ற நம் அனைவரையும் ஊக்குவிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.