கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொட்டம்குளக்கரா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சமய விளக்கு என்ற திருவிழா நடைபெறுகிறது.
சமய என்றால் அலங்காரம் என்று பொருள். ஆண்கள், பெண்களை போல் அலங்காரம் செய்து, விளக்குகள் ஏந்தி வந்து வழிபாடு செய்வதால் இதற்கு சமயவிளக்கு திருவிழா என்று பெயர்.
நம் நாட்டில் நடைபெறும் வினோதமான திருவிழாக்களில் இதுவும் ஒன்று. இந்த திருவிழாவின் சிறப்பம்சம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண் வேடமிட்டு வழிபாடு நடத்துவது தான்.
இக்கோவிலில் பகவதி அம்மன் கொட்டம்குளக்கரா தேவி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த அம்பாள் சுயம்புவாக தோன்றியதாக சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாத இறுதியில் இந்த சமய விளக்கு பூஜை நடத்தப்படுகிறது. 19 நாட்கள் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. கடைசி இரண்டு நாட்களில் இரவு முழுவதும் சமய விளங்கு திருவிழா, அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது.
பகவதி அம்மனின் அருள் வேண்டி ஆண்கள், பெண்களை போல் புடவை, பட்டுப் புடவை, தாவணி போன்ற உடைகளை அணிந்து வந்து, விளக்கேற்றி வழிபடுகின்றனர். ஏறக்குறைய 4000 க்கும் அதிகமானவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே இக்கோவில் வழிபட்டு வந்துள்ளனர். தேவியை வழிபடும் ஆர்வத்தில் சிறுவர்கள் சிலர் பெண்களை போல் வேடமிட்டு, இக்கோவிலில் வந்து வழிபட்டு, பகவதி அம்மனின் அருளை பெற்றுள்ளனர்.
அன்று முதல் ஆண்கள், பெண்களை போல வேடமிட்டு இந்த கோவிலுக்கு வந்து வழிபாட்டு சமய விளக்கு திருவிழா நடத்தப்படுகிறது. அதனால் இந்த திருவிழாவில் திருநங்கைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அம்மனை வழிபடுகின்றனர்.