மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவிற்கு வாக்களித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில், பாஜகவில் இணைந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலரால், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. ஊழல், கொலை, கொள்ளை, நில அபகரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதனால், அதிருப்தி அடையும் ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து வருகின்றனர். பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்பதால், அவர்கள் பாஜகவில் இணைகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின்போது கூட, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அபிஷேக் மனு சிங்விக்கு வாக்களிக்காமல், பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மகாஜனுக்கு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 வாக்களித்தனர். இதனால், பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். இதனைத் அடுத்து, 6 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சுதிர் சர்மா, ரவி தாக்கூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லகன்பால், சைதன்யா சர்மா மற்றும் தேவிந்தர் குமார் பூட்டோ ஆகிய 6 பேரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
டெல்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சல பிரதேச பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் பிண்டல் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.