மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயில் கருவறையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 பூசாரிகள் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயில் கருவறையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இதில் 13 பூசாரிகள் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் இங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து உஜ்ஜயினி ஆட்சியர் நீரஜ் குமார் சிங் பேசும்போது, “கோயிலில் பஸ்ம ஆரத்தி காண்பிக்கப்பட்ட போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
இதற்கிடையே, காயமடைந்த 13 பேரில் ஒன்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இந்தூருக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
उज्जैन के श्री महाकाल मंदिर में आग लगने की घटना के संबंध में मुख्यमंत्री श्री @DrMohanYadav51 जी से बात कर जानकारी ली। स्थानीय प्रशासन घायलों को सहायता व उपचार उपलब्ध करवा रहा है। मैं बाबा महाकाल से घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूँ।
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 25, 2024
“உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மகாகாளேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவிடம் இருந்து தகவல் கிடைத்தது. உள்ளூர் நிர்வாகம் காயமடைந்தவர்களுக்கு உதவி மற்றும் சிகிச்சை அளித்து வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் பதிவில்
आज प्रातः बाबा महाकाल मंदिर के गर्भगृह में भस्म आरती के दौरान हुई दुर्घटना दुखद है।
मैं सुबह से ही प्रशासन के संपर्क में हूँ। सब नियंत्रण में है। बाबा महाकाल से प्रार्थना है कि सभी घायल शीघ्र ही पूर्णतः स्वस्थ हों।
— Dr Mohan Yadav (Modi Ka Parivar) (@DrMohanYadav51) March 25, 2024
“மகாகாளேஸ்வரர் கோவிலின் கருவறையில் பஸ்ம ஆரத்தியின் போது ஏற்பட்ட தீ விபத்து துரதிர்ஷ்டவசமானது. நான் காலையில் இருந்து கோவில் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறேன். எல்லாம் கட்டுக்குள் உள்ளது. பாபா மஹாகாலிடம் பிரார்த்தனை செய்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.