நீலகிரியில் காவல்துறையினரை கண்டித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் 102 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
நீலகிரி தொகுதி வேட்பாளர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக வந்தனர்.
அதே நேரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினரும் ஒன்று திரண்டனர். இரு கட்சியினரும் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக செல்ல தயாராக ஒரே பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினருக்கு 10 மணியும் அதிமுகவினருக்கு 11 மணியம் நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பாஜக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நீலகிரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான பாஜகவினருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது பாஜக தொண்டர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
பின்னர், நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினரை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் பழைய கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.