புகழ்பெற்ற ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் இலட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 11ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொடங்கியது.
முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. 15 அடி நீளத்திற்கு தயார் செய்யப்பட்ட குண்டத்தில் முதல் நபராக தலைமை பூசாரி இறங்கி விழாவை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இரங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகாவிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர். இந்த விழாவில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குண்டம் திருவிழாவில் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குண்டம் திருவிழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.