நடிகை என்ற முறையில் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியாவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி அளித்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் கவர்ச்சி புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதேபோல், குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகி அஹிர் கங்கனா ரனாவத் குறித்து ஒரு கமென்ட் செய்திருந்தார். இதற்கு பாஜக மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புள்ள சுப்ரியா ஜி, கடந்த 20 வருடங்களில் ஒரு கலைஞனாக நான் எல்லாவிதமான வேடத்திலும் நடித்துள்ளேன். ராணி திரைப்படத்தில் ஒரு அப்பாவி பெண் வேடத்திலும், தாகம் படத்தில் மயக்கும் உளவாளியாகவும், மணிகர்ணிகாவில் ஒரு தெய்வ பெண்ணாகவும், சந்திரமுகியில் பேய் வேடத்திலும், ரஜ்ஜோவில் விபச்சாரி வேடத்திலும் நடித்துள்ளேன்.
கட்டுப்பாடுகளில் இருந்து நமது மகள்களை விடுவிக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் கண்ணியம் உண்டு என அவர் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,கங்கனா நீங்கள் ஒரு போராளி. ஒளிருங்கள், ஆல் தி பெஸ்ட். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.